தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஸ்டாலின்

அ.தி.மு.க. அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்வதற்காக தமிழகம் முழுவதும் எழுச்சி பயணம் மேற்கொள்வதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ‘நமக்கு நாமே’ பயணத்தை மாநிலம் முழுவதும் நடத்தினோம். அதே போல் இப்போது ஒரு எழுச்சி பயணத்தை நடத்த உள்ளோம். அடுத்த மாதம் (நவம்பர்) முதல் வாரம் தொடங்கும் இந்த பயணம் டிசம்பர் முதல் வாரம் முடியும்.

பயணம் தொடங்கும் இடம்? யார் தொடங்கி வைப்பார்? என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும். இந்த பயணம் வெறும் தேர்தலை மட்டும் கருத்தில் கொண்டு நடத்தப்படவில்லை. அ.தி.மு.க. அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்வதற்காகவும் நடத்தப்படுகிறது.

அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஏற்கனவே முந்தைய ஆளுனர் வித்யாசாகர்ராவிடம் புகார் அளித்துள்ளோம். அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. புதிய கவர்னரிடம் இப்போதைக்கு புகார் அளிக்கும் திட்டம் எதுவும் இல்லை. கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. எனவே சட்ட ரீதியாகவும் சந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணா இப்போது இருந்திருந்தால் பா.ஜனதாவில் சேர்ந்திருப்பார் என்று அக்கட்சியின் செயலாளர் முரளிதரராவ் கூறியது பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டபோது, இதற்கு நான் ஏற்கனவே விளக்கமாக பதில் கூறி உள்ளேன். அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றி கட்சியை வளர்க்க வேண்டிய நிலைக்கு பா.ஜனதா தள்ளப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்