உள்ளூராட்சி மன்றங்களை தரமுயர்த்துதல் என்ற போர்வையில் நிலங்கள் அபகரிப்பு: சுரேஸ்

உள்ளூராட்சி மன்றங்களைத் தரமுயர்த்துதல் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் தமிழர்களின் நில அபகரிப்பிற்கு கண்டனம் தெரிவிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தாமரைக்கேணியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களைத் தரமுயர்தல் மற்றும் புதிதாக ஸ்தாபித்தல் என்ற முன்மொழிவுகள் மூலம், தமிழ் பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள தமிழ்க் கிராமங்களை முஸ்லிம் மக்களின் பிரதேசங்களுக்குள் உள்வாங்கி தமிழர்களை இன ரீதியாக ஓரம் கட்டும் இவ்வாறான முன்மொழிவுகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.

கோறளைப்பற்று மத்தி எனப்படுவது யத்த காலத்தில் மக்களுக்கு சேவை வழங்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட சட்டரீதியற்ற ஒரு தற்காலிக ஏற்பாடாகும். அது அக்காலத்தில் அரசாங்கத்தோடு இணைந்திருந்த சில முஸ்லீம் அரசியல்வாதிகள் மூலம் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் சிலர் இன்று இதனை ஒரு தனி அலகாக ஏற்படுத்த விளைகின்றனர். இது தொடர்பான முன்மொழிவானது அரசியல் இலாபம் கருதியே முன்மொழியப்பட்டுள்ளது. எனவே இத் தற்காலிக அமைப்பானது யுத்தம் முடிந்து தற்போது நிலவுகின்ற நல்லாட்சியில் தேவையற்றது.

எனவே கோறளைப்பற்று தெற்கில் காணப்படுகின்ற பகுதிகள் யுத்தத்திற்கு முன்னர் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே தொடர்ந்தும் இணைத்திருத்தல் பொருத்தமானது” என தர்மலிங்கம் சுரேஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்