போராட்டத்திற்கான தியாகங்களை குழிதோண்டிப் புதைக்க அனுமதிக்க மாட்டோம்

புதன் கிழமை 25.10.2017 அன்று, ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் முன் தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி சிங்கள பேரினவாத அரசால் தமிழர்கள் என்ற காரணத்தினால் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்று முன் நிறுத்தப்படாது தடுத்து வைத்திருக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் கவனயீர்ப்பு நடைபெற்றது.

2009 ம் ஆண்டு அனைத்துலகத்தின் பரிந்துரையைக் கேட்டு ஆயுதங்களை மௌனித்து இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த போராளிகளையும் பொது மக்களையும் இலங்கை இராணுவம் என்ன செய்தது?

தொடரந்தும் காணமல் ஆக்கப்பட்டோரின்நிலைமை என்ன?

தமிழர் பாரம்பரிய நிலங்கள் இன்னும் சிங்கள பேரினவாத இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டே இருக்கின்றது.

சிங்கள பேரினவாத அரசின் பொய்ப்பரப்புரையை நம்பி இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட ஐரோப்பிய ஒன்றியம் துணை போய் விட்டது.

தமிழினம் பாதுகாக்கப்பட ஒரே ஒரு தீர்வு தமிழீழம் தான்.

போன்ற கோசங்களுடன் நூற்றுக்கணக்கான தமிழீழ மக்கள் தாயக மக்களுக்கு வலுச் சேர்ந்திருந்தனர்.

அனைத்துலகம் இனியும் பொறுமை காக்காது தமிழீழத்தை அங்கீகரித்து இன்று உலகத்தில் தமது விடுதலைக்காகப் போராடி விடுதலையடைந்துள்ள நாடுகள் போன்று எமது தமிழீழத்தையும் அங்கீகரித்து எம்மையும் எமது நிலத்தையும் பாதுகாக்க வழி செய்யுமாறு கோரப்பட்டது.

70 ஆண்டுகளாக நடைபெறும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் இந்தப் போராட்டத்திற்கான தியாகங்களை குழிதோண்டிப் புதைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறியும் சிங்கள பேரினவாத அரசால் நிறைவேற்றப்படுகின்ற யாப்புகள் எதுவும் எமக்கு விடுதலையைப் பெற்றுத்தராது எனக் கூறியும் சிறீலங்கா அரசினால் நிறைவேற்றப்பட்ட இடைக்கால அரசியல் யாப்பும் கிழித்தெறியப்பட்டது.

இவ்வாறான கவனயீர்ப்புகள் உலகெங்கும் நடாத்தப்படவேண்டும் என்று அறைகூவி “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்