அரசியல் கைதிகள் தொடர்பான வழக்கு வவுனியாவில் இருந்து அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டமைக்கான காரணம் அந்த வழக்கின் சாட்சியாளர்களே என்றும், இதில் அரசியல் தலையீடுகள் இல்லை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில்,
இந்த வழக்கின் பிரதான சாட்சியாளர்களாக இருப்பவர்கள், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களான தமிழர்கள். தாங்கள் சாட்சியம் வழங்கும் போது தமிழ் பிரதேசங்களுக்கு சென்று சாட்சியம் வழங்க மாட்டோம் என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.
சிங்கள பிரதேசங்களில் உள்ள நீதிமன்றத்தில் சாட்சியம் வழங்க தயார் என்று கூறியிருக்கின்றார்கள். அதனால் தான் இந்த அரசியல் கைதிகளுக்கு எதிரான வழக்கு அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்று கூறினார்.
ஆகவே அந்த சாட்சியாளர்கள் தமிழ் பிரதேசத்திற்கு வந்து சாட்சியமளிப்பதற்கு பயமிருந்தால், அவர்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தான் சட்ட மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இது தொடர்பில் அந்த சாட்சியாளர்களுடன் பேசுவதற்கு சட்ட மா அதிபர் இணங்கியுள்ளதாகவும் எம். ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பை எற்றுக் கொண்டு அந்த சாட்சியாளர்கள் வவுனியா நீதிமன்றத்திற்கு வரத் தயாராக இருந்தால் அந்த வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்ற தயார் என்று சட்ட மா அதிபர் கூறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.
