அரியாலை துப்பாக்கிச்சூட்டை நடத்திய ராணுவத்தினர் கோட்டபாய முகாமில்?

யாழ்ப்பாணம் – அரியாலை உதயபுரம் பகுதியில் இளைஞன் ஒருவரை சுட்டுக்கொல்ல பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனம், மண்டைத்தீவு கோட்டாபய கடற்படை முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு அடிரடியாக தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ். நீதவான் நீதிமன்ற அனுமதியுடன், நேற்று (வியாழக்கிழமை) மாலை 6 மணியளவில் குறித்த கடற்படை முகாமிற்குள் சென்ற விசேட பொலிஸ் குழுவினர் முகாமை சோதனையிட்டுள்ளனர். எனினும், அங்கு அவ்வாறான வாகனம் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

யாழ். உதயபுரம் பகுதியைச் சேர்ந்த டொன் பொஸ்கோ டெஸ்மன் என்ற இளைஞன், கடந்த 22ஆம் திகதி தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது சுட்டுக்கொல்லப்பட்டார். சிவில் உடையில் இருந்த பொலிஸாரே இத்துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக கொலையுண்டவரின் நண்பர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். எனினும், கடற்படையின் புலனாய்வு பிரிவுக்கு இக் கொலையுடன் தொடர்பிருக்கலாமென பொலிஸ் தரப்பு சந்தேகிக்கின்றது. மேலும், பொலிஸாரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமே, இளைஞனை காவுகொண்டுள்ளது என்ற சந்தேகமும் நிலவுகின்றது.

இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றது. அதற்கு மேலதிகமாக, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனையின் பிரகாரம், கொழும்பிலிருந்தும் விசேட புலனாய்வு அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான பின்னணி மர்மமாக உள்ள நிலையில், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.

About இலக்கியன்

மறுமொழி இடவும்