வட்டுவாகல் பாலத்தை மறித்து போராட்டம்!

கோத்தபாய கடற்படைத் தளத்துக்கு காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு- வட்டவாகல் பாலத்தில் பொதுமக்கள் இன்று மறியல் போராட்டம் நடத்தினர்.

வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியை உள்ளடக்கி மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள கோத்தபாய கடற்படை தளத்துக்கு இன்று நிரந்தரமாக காணி சுவீகரிப்பு பணிகள் நடைபெறவிருந்த நிலையில், குறித்த காணிகளுக்கு சொந்தமான மக்கள் கடற்படை முகாம் அமைக்க நிரந்தரமாக காணி சுவீகரிப்பு அளவீடுக்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்து வீதிமறியல் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

கடந்த வர்த்தமானி அறிவித்தலில் குறித்த கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக காணி சுவீகரிக்கப்பட இருப்பதாக அறிவித்தல் வந்த நிலையில், இன்றையதினம் காணி அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருந்தன. இதனை அறிந்த மக்கள் குறித்த கடற்படை முகாமுக்கு முன்பாக உள்ள வட்டுவாகல் பாலத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரந்தன் முல்லைத்தீவு வீதி ஊடான போக்குவரத்து அரை மணி நேரத்துக்கும் அதிகமாக தடைப்பட்டிருந்தது.

அதனை அடுத்து, வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பொலிஸார் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வீதிமறியலை கைவிடுமாறு கோரிய போதும் மக்கள் தொடர்ந்தும் வீதிமறியல் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

அதன்பின்பு, மக்களை சந்தித்த முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் இன்று நடைபெற இருந்த குறித்த காணி சுவீகரிப்பு தொடர்பான அளவீட்டு பணிகள் இன்று நடைபெறமாட்டாது என தெரிவித்ததோடு உரியவர்களுக்கு காணி உரிமையாளர்களின் கோரிக்கை தொடர்பில் தெரிவிப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் மக்களால் கைவிடப்பட்டது.

குறித்த மக்களின் போராட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கலந்து கொண்டு மக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கவேண்டும் என தெரிவித்திருந்தார். இறுதி யுத்தத்துக்கு பின்னர் குறித்த கடற்படை முகாம் மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டதோடு கடற்படைமுகாம் நவீன வடிவில் பாரிய படைத்தளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த கடற்படைத்தளத்துக்கு நிரந்தரமாக காணி சுவீகரிப்பு நடைபெற பல முறை அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்