தனிநாடாக சுதந்திரப் பிரகடனம் செய்தது கட்டலோனியா!

ஸ்பெய்னின் தன்னாட்சிப் பிராந்தியமான, கட்டலோனியாவின் நாடாளுமன்றம் நேற்று தனிநாடாகச் சுதந்திரப் பிரகடனம் செய்துள்ளது. ஸ்பெயினின் மக்கள் தொகையில், 16 வீதத்தைக் கொண்ட கட்டலோனிய மக்கள், கட்டலோனியாவை தனிநாடாகப் பிரகடனம் செய்ய வேண்டும் என்று கோரிப் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கட்டலோனிய நாடாளுமன்றத்தில் நேற்று சுதந்திரப் பிரகடனம் குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் புறக்கணித்த இந்த வாக்கெடுப்பில், சுதந்திரப் பிரகடனத்துக்கு ஆதரவாக 70 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதையடுத்து, ஸ்பெய்னில் இருந்து பிரிந்து, கட்டலோனியாவை தனிநாடாக நாடாளுமன்றம் பிரகடனம் செய்தது.

இதையடுத்து, கட்டலோனியாவின் பிராந்திய நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஸ்பெய்ன் பிரதமர் மரியனோ ரஜாய் அறிவித்துள்ளார்.

ஸ்பெய்னின் நேரடி ஆட்சியின் கீழ் கட்டலோனியா வருவதாகவும், விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு தேர்வு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்டலன் அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் தலைமையிலான அமைச்சரவையையும் பதவி நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார்.

கட்டலோனியாவில் நேரடி ஆட்சியை நடைமுறைப்படுத்த, ஸ்பெய்ன் நாடாளுமன்றமும், ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஒக்ரோபர் 1ஆம் நாள், ஸ்பெய்னிலிருந்து கட்டலோனியா தன்னாட்சி பிராந்தியம், பிரிந்து தனிநாடாக அறிவிப்பது குறித்து நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் 43 வீத கட்டலோனிய மக்கள் வாக்களித்தனர். அவர்களில் 90 வீதமான மக்கள் கட்டலோனியா தனி நாடாகப் பிரிவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

எனினும், அந்த வாக்கெடுப்பு செல்லாது என்று ஸ்பெய்ன் அரசியலமைப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கடந்த ஒக்ரோபர் 11 ஆம் நாள், ஸ்பெய்னில் இருந்து கட்டலோனியா விடுதலை பெற்று தனி நாடாகி விட்டதாக கட்டலோனிய அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் பிற பிராந்தியத் தலைவர்கள் கையெழுத்திட்டு ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர்.

எனினும், ஸ்பெய்னுடன் பேச்சு நடத்துவதற்காக, அந்தப் பிரகடனத்தை செயற்படுத்துவதை சில வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

பார்சிலோனாவில் நாடாளுமன்றத்தைக் கொண்ட கட்டலோனியா, தனிக் கொடி, தனி தேசிய கீதம், அதிபர், அமைச்சரவை, காவல்துறை ஆகியவற்றைக் கொண்டது.

வெளிவிவகாரம், பாதுகாப்பு, நிதி ஆகிய அதிகாரங்கள், ஸ்பெய்ன் அரசின் கீழும், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், உள்நாட்டு பாதுகாப்பு ஆகியன பிராந்திய அரசின் கீழும் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் மக்கள் தொகை மற்றும் உற்பத்தியில், 16 வீதத்தைக் கொண்ட கட்டலோனியா, ஸ்பெய்னின் மொத்த தேசிய உற்பத்தியில் 19 வீதத்தைக் கொண்டது.

20.7 வீத வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்ட கட்டலோனியா, ஸ்பெய்னின் ஏற்றுமதியில் 25.6 வீத பங்களிப்பை செலுத்துகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்