எளிய மக்களின் பாடுகளை எழுத்தில் வடித்த எழுத்துலக பேராளுமை மேலாண்மை பொன்னுச்சாமி! – சீமான் புகழாரம்

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் மறைவு (30-10-2017) குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ் இலக்கிய உலகின் தனிப்பெரும் ஆளுமையும், மாபெரும் எழுத்தாளருமான பெருமதிப்பிற்குரிய ஐயா மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் மறைந்த செய்தியினைக் கேட்டு மிகுந்த மனத்துயருற்றேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களது குடும்பத்துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தமிழ் எழுத்துலகில் தனக்கெனத் தனித்துவத்தன்மையை உருவாக்கி தமிழ் இலக்கிய உலகிற்குப் பெருமைசேர்த்த பெருந்தகையாளராக, சமூகச் சிந்தனையாளராக ஐயா மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் திகழ்ந்தார்கள். அவரது எழுத்துக்களில் காணப்பட்ட சமூகச் சிந்தனைகள், அநீதிக்கெதிரான கோபம், பொய்மைகளுக்கெதிரான எதிர்ப்புணர்வு, ஆதிக்கங்களுகெதிரான முற்போக்குத்தன்மை ஆகியவற்றால் அவர் மற்ற எழுத்தாளர்களைக் காட்டிலும் சிறப்புற்றவராக, போற்றத்தக்கவராகத் திகழ்ந்தார்.

கடந்த 2007ஆம் ஆண்டு ‘மின்சாரப்பூ’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலுக்காக இந்திய அரசின் உயரிய விருதான சாகித்திய அகாதமி விருதினைப் பெற்று, தமிழ் இலக்கிய உலகிற்குப் பெருமை சேர்த்தார். மேலும், தமிழக அரசின் இலக்கிய விருதினையும், வட அமெரிக்க தமிழ்ப்பேரவையின் மாட்சிமை விருதினையும், பல்வேறு அமைப்புகளின் உயரிய விருதுகளையும் பெற்ற மாபெரும் இலக்கிய ஆளுமையாக மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் திகழ்ந்தார். அவரது இழப்பானது தமிழ் இலக்கிய உலகிற்கு மட்டுமல்லாது தமிழ்த்தேசிய இனத்திற்கே நிகழ்ந்த பேரிழப்பாகக் கருதுகிறேன்.

எளிய மக்களின் பாடுகளை தன் எழுத்தில் வடித்த மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் ஈடு இணையற்ற இடத்தினை யாராலும் ஈடுகட்ட முடியாது. அந்த எழுத்துலக பேராளுமைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன். அவரின் புகழ் வரலாற்றில் என்றென்றும் நீடித்து நிலைத்து நிற்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்