கடந்த 2017.10.29 ஆம் நாளன்று முல்லைத்தீவின் கருநாட்டுக்கேணி மற்றும் கொக்கிளாய் பகுதிகளுக்கு பயணித்த வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசார ரவிகரன் அவர்கள் அவ்விடங்களில் மக்கள் குறைகேள் சந்திப்புகளை நடாத்தினார்.
உச்சளவில் பாதிக்கப்பட்டும் இன்றுவரை வீட்டுத்திட்டம் கிடைக்காத மக்களின் வீடுகளையும் கருநாட்டுக்கேணி மற்றும் கொக்கிளாய் மீனவர்களது இறங்குதுறையையும் நேரடியாகச் சென்று ரவிகரன் பார்வையிட்டார்.
கருநாட்டுக்கேணி பொதுநோக்குமண்டகத்தில் நடைபெற்ற முதலாவது மக்கள் குறைகேள் சந்திப்பில் மீனவர்களது இறங்குதுறை சார்ந்த பிணக்குகள், கோயில் திருத்தப்பணி, வீதித்திருத்தம் மற்றும் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு குறைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் திரு.கு.குமாரசுவாமி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த சந்திப்பில் கோவில் தலைவர் திரு.சுப்பிரமணியம் இராசரத்தினம், கோவில் செயலாளர் திரு. சொக்கலிங்கம் மகேந்திரன், கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் திரு. பொன்னம்பலம் நவரத்தினம், மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவி திருமதி பூலோகம் குருவதனி, கிராம அபிவிருத்தி சங்கச்செயலாளர் கந்தசாமி சத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து கருநாட்டுக்கேணியில் வீட்டுத்திட்டம் வழங்கப்படாதவர்களின் வீடுகளையும் அவர்கள் எதிர்நோக்கும் இடர்நிலையையும் நேரில் சென்று பார்வையிட்டதுடன் கருநாட்டுக்கேணி மீனவர்களின் இறங்குதுறையையும் பார்வையிட்டு இந்த சிக்கல்களுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பேன் எனவும் ரவிகரன் தெரிவித்தார்.
தொடர்ந்து கொக்கிளாய் – புளியமுனை, மீனவர்களின் இறங்கு துறையைப் பார்வையிட்ட ரவிகரன் அவர்கள் அந்த மீனவர்களின் குறைகளையும் கேட்டறிந்து அதற்கான தீர்வுகளையும் உரிய இடங்களுக்கு கொண்டுசெல்வதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


