இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் இன்னும் ஏற்படவில்லை! அனந்தி சசிதரன்!

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கிய இலங்கையின் எப்பகுதியிலும் தமிழர்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் இன்னும் ஏற்பட்விலை. இந்நிலையில் மேற்குலக நாடுகளில் அகதி தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்படும் ஈழத்தமிழர்களை திருப்பியனுப்புவதென்பது அந்தந்த நாடுகள் கடைபிடித்துவரும் மனிதாபிமானம் மற்றும் மனித உரிமை சார்ந்த கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்குவதாகவே அமையும்.

கடந்த ஆட்சிக்காலங்களில் வெளித்தெரியும் வகையில் நடைபெற்று வந்த தமிழர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் நிலையானது இன்று மறைமுகமான வகையில் அதே வீச்சோடு தொடர்ந்து வருகின்றது. போரிற்கு பின்னரான காலத்தில் தமிழர் தாயகத்தில் வாழ்ந்து வரும் மக்கள் அந்த சூழலுக்கு தக்கவாறு தம்மை தகவமைத்துக் கொண்டு வாழப் பழக்கிக் கொண்டுள்ளார்கள்.

இருந்தும் அன்றாடம் ஏற்படும் அரசியல் மற்றும் உரிமைப் பிரச்சினைகள் குறித்த சாத்வீகப் போராட்டங்களில் முன்நின்று செயற்படுபவர்களை இலக்குவைத்து இலங்கை இராணுவ கட்டமைப்பில் உள்ளவர்களால் நேரடியாகவும் மறமுகமாகவுமான அச்சுறுத்தல் நடவடிக்கைகள் தற்போதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தம்சார்ந்த மக்கள் சமூகத்தின் மீதான அக்கறையின்பாற்பட்டு செயற்படுபவர்களைக்கூட அச்சுறுத்தும் போக்கானது ஜனநாயக விரோதப்போக்கின் வெளிப்பாடாகும்.

மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களும் இலங்கை இராணுவம் மற்றும் புலனாய்வுத் துறையினரால் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதுடன் தொடர் கண்காணிப்பிற்குள்ளாக்கப்பட்டும் வருகின்றனர்.

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் கடந்த 22.10.2017 அன்று பொது மகன் ஒருவர் இனம்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்திருந்தார். இதுகுறித்த பின்னணி காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், இத்தாக்குதல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் கைத்துப்பாக்கி என்பன யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அமைந்துள்ள அதிரடிப்படையினரின் முகாமில் இருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. படுகொலையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்தியதாக கருதப்படும் வாகனங்கள் மற்றும் கைத்துப்பாக்கி என்பன அதிரடிப்படை முகாமில் கைப்பற்றப்பட்டுள்ளதை வைத்து பார்க்கும் போது அதன் சூத்திரதாரிகள் அங்கிருப்பதற்கோ அல்லது குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் இடமாக அந்த முகாம் செயற்பட்டு வருகின்றதோ என்ற சந்தேகம் எழுகிறது.

அண்மையில் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு திரும்பிய ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீப் அவர்களது மதிப்பீட்டின் அடிப்படையிலான பரிந்துரைகளில், மனித உரிமை காப்பாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் முக்கியமாக பெண்கள் ஆகிய தரப்பினர் மீதான பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என காட்டமாக குறிப்பிட்டுள்ளதன் மூலம் மேற்படி விடயங்களின் உண்மைத்தன்மையை நிரூபணமாகியுள்ளது.

இதைவிட, அகதி தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுவோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுவரும் சம்பங்கள் தொடர்ந்து வருகின்றது.

புலம்பெயர் தேசங்களில் உள்ள ஜனநாயக சூழலில் எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரும் செயற்பாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்ந்துவரும் தமிழர்கள் அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டவகையில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றார்கள். தாயகத்தில் எமது குரல்வளை நசுக்கப்பட்ட நிலையில் எமது குரலாகவே புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களே செயற்பட்டு வருகின்றார்கள்.

நீதிகான எம்மவர்களின் இச்செயற்பாட்டை பயங்கரவாத செயற்பாடாக திரிவுபடுத்தி புலம்பெயர் செயற்பாட்டாளர்களை புலிகளாகவே பார்க்கும் ஆட்சியாளர்களின் மனப்போக்கில் மாறுதலேதும் ஏற்பட்டுவிடவில்லை என்பதனையே நாடு திரும்பும்போது நடைபெறும் கைதுகள் உணர்த்தி நிற்கின்றன.

இவ்வாறான சூழலில் அகதி தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்புவதென்பது உண்மையில் ஆபத்தின் நுழைவாயிலில் அவர்களை கொண்டுவந்து தள்ளி விடுவதாகவே அமைந்துள்ளது. ஆகவே, அகதி தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்பும் முடிவை சம்பந்தப்பட்ட நா-டுகள் மனிதாபிமான அடிப்படையில் மீள் பரிசீலனை செய்து அவர்களது பாதுகாப்பான உயிர்வாழ்வை உறுதிப்படுத்துவதன் மூலமே கடைபிடித்துவரும் மனிதாபிமானம், மனிதஉரிமை கோட்பாடுகளுக்கு அர்த்தம்சேர்க்க முடியும்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்