தமிழர்கள் குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக்கொள்வது எதிர்காலத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் – பொ.ஐங்கரநேசன்

தமிழ்க்குடும்பங்கள் பல வருடங்களுக்கு முன்னர் சராசரியாக ஐந்து பிள்ளைகளைக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது தமிழ்க்குடும்பங்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. தமிழர்கள் குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக் கொள்வது எதிர்காலத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று வடக்கின் முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

கோண்டாவில் றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு நிகழ்சி இன்று வெள்ளிக்கிழமை (10.11.2017) நடைபெற்றது. அதிபர் க.நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்ற பல பாடசாலைகளில் இன்று முப்பது, நாற்பது மாணவர்கள் மாத்திரமே பயின்று கொண்டிருக்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக் குறைவால் பல பாடசாலைகளை மூடிவிடலாம் என்ற கருத்துகள்கூட முன்வைக்கப்படுகின்றன. இதற்கு நகரங்களில் உள்ள பிரபலமான பாடசாலைகளில் மாணவர்கள் பயில விரும்புவதையே பலரும் காரணமாகக் கூறி வருகின்றனர். கிராமப் பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருவதற்கு இது ஒரு காரணமாக இருந்தாலும் இதுவே பிரதான காரணம் அல்ல.

யுத்தத்தினால் ஒருபுறம் பெருந்தொகையான தமிழ்மக்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து போக, இன்னொருபுறம் இனப்பெருக்க வீரியம் உள்ள ஒரு தலைமுறை இளம்சந்ததியும் போரில் அழிந்து போயுள்ளது. இதனால், எங்களது சனத்தொகை குறைந்து வருகிறது. இருக்கின்ற குடும்பங்கள்கூட பல்வேறு காரணங்களால் இரண்டுக்கு மேல் குழந்தைகளைப் பெற விரும்பவில்லை. இதுவே பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து செல்வதற்கான பிரதான காரணமாக உள்ளது.

இன்று எண்ணிக்கையே சகல விடயங்களையும் தீர்மானிக்கும் பிரதான சக்தியாக உள்ளது. உண்மையானதா, நீதியானதா, சரியானதா, பிழையானதா என்று பார்க்காமல் பொய்க்கும், அநீதிக்கும், பிழையான விடயங்களுக்கும் பெரும்பான்மைப் பலம் இருந்தால் அது பெரு வெற்றி பெற்று விடுகிறது. தமிழ்மக்கள் குழந்தைகளை அதிகளவில் பெற்றுக் கொள்வதில் அக்கறை காட்டாது விட்டால் விரைவில் இலங்கைத் தீவில் சிறுபான்மையிலும் சிறுபான்மையாகத் தமிழினம் மாற வேண்டிய அவலநிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் அடங்கிய பல கடிதங்கள் கிளிநொச்சி மாவட்ட
கிளிநொச்சி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவியிடம் ஆசிரியர் ஒருவர் தகாதமுறையில் நடக்க முற்பட்டமை தொடர்பில் பாடசாலையின் அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட
கிளிநொச்சி வசந்தநகரில் கிணற்றில் வீழ்ந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான்.இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். பாதுகாப்பற்ற கிணற்றில்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*