ஜெயா டிவியை முடக்க திட்டமிடுகிறதா மத்திய அரசு?

ஜெயா டிவியின் சிஇஓவும் இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமனை அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினகரனுக்கும், சசிகலாவுக்கும் எல்லாமுமாக உள்ள விவேக் ஜெயராமனை சிக்க வைப்பதற்காகவே இந்த மாபெரும் ரெய்டு நடைபெறுவதாக கூறப்படுகிறது.

கடந்த 2015-ஆம் ஆண்டு வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் வணிக வளாகத்தில் 11 தியேட்டர்களை ஜாஸ் சினிமாஸ் என்ற பெயரில் விவேக் வாங்கியுள்ளார். இதேபோல் விவேக்கிற்கு சொந்தமாக 136 தியேட்டர்கள் உள்ளனவாம். ஆனால் தியேட்டர்களை குத்தகைக்கு எடுத்ததாக கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 தினங்களாக நடந்து வரும் வருமான வரித் துறை விசாரணையில் அந்த தியேட்டர்களை குத்தகைக்கு வாங்க கோடிக்கணக்கான பணம் எங்கிருந்து வந்தது என்று அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் ஜெயா டிவி கணக்குகளையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக ஜெயா டிவியின் மேலாளர்கள், கணக்காளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜெயா டிவியின் கணக்குகளை அமலாக்கத் துறை ஆராய்ந்து அவற்றில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது நிரூபணமானால் விவேக்கிற்கு முதலில் சம்மன் அனுப்பப்படும். பிறகு அவரிடம் விசாரணை நடத்தி அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதேபோல் ஜெயா டிவி தொடர்புடையவர்களும் அடுத்தடுத்து சம்மன் அனுப்பப்பட்டு அவர்களும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்