உங்களால்தான் நான்!உங்களுக்காகவே நான்!

கல்லறைத் தோழர்களே
உங்களால்தான்
அடையாளப்படுத்தப்படுகிறேன்.

சந்தனப்பேழைகளே
உங்களால்தான்
அங்கீகரிக்கப்படுகிறேன்.

மாவீரர்களே
உங்களால்தான்
பெருமைப்படுத்தப்படுகிறேன்.

நச்சுச்செடியென்ற
நாமமகற்றிய
நஞ்சு மாலை அணிந்தவர்களே
உங்களால்தான்
புனிதப்படுத்தப்பட்டேன்.

யுகயுகங்களாய்
வழிபாட்டிற்குரியதாய்
ஏற்றுக்கொள்ளப்பட்ட
மலர் வரிசையில்
புதிய புரட்சியேற்பட்டுத்தி
முதன்மையிடம்
தந்துசென்ற
தன்னிகரில்லா
தவப்புதல்வர்களே
உங்களால்தான்
பாக்கியசாலியானேன்.

உங்கள் பாதம்
பணிகின்றபோது
யுகயுகங்களாக காத்திருந்த
பிறவிப்பயன் அடைகின்றேன்.

உங்களை
நினைப்பதற்கும்
வணங்குவதற்கும்
போற்றுவதற்கும்
யார் முன்வருகிறார்களோ
இல்லையோ
நான் இருக்கின்றேன்.

நீங்கள் உலவுகின்ற
காற்றுவெளியில்
தலையசைத்து
வணங்குகிறேன்.
ஆம்,
உங்களால்தான் நான்!
உங்களுக்காகவே நான்!

கார்த்திகைப் பூ!

About இலக்கியன்

மறுமொழி இடவும்