அரசியல் கைதிகள் விடயத்தில் தாமதமின்றி செயற்பட வேண்டும்- சிங்கக்கொடி சம்பந்தன் கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முன்னாள் நீதியமைச்சர் அக்கறை செலுத்தவில்லை. அதனாலேயே பிரச்சினைகள் தொடர்ந்து செல்கின்றன. இவ்விடயத்தில் தற்போதை நீதியமைச்சர் தலதா அத்துகோரள தாமதமின்றி கவனம்;செலுத்தி விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற, வரவு செலவுத் திட்டத்தில் நீதியமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட பலர் பல வருட காலமாக தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிப்பதற்கு பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி, மாற்று சட்டமொன்றை கொண்டுவருவதாக சர்வதேசத்திற்கு இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும், அந்நடவடிக்கை தாமதிக்கப்பட்டு வருகின்றதென சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலையீட்டுடன், சட்டம் ஒழுங்கு அமைச்சர், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து, அரசியல் கைதிகள் விடயத்தில் தாமதமின்றி செயற்பட வேண்டுமென நீதியமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, பிரிக்கப்படாத நாட்டிற்குள் தீர்வை பெற்றுக்கொள்ள தயாரென தமிழ் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், பிரிவினைவாதிகள் சிலரே இதனை குழப்ப முனைவதாக சம்பந்தன் குறிப்பிட்டார்.

இதனை அரசாங்கம் உணர்ந்து செயற்பட வேண்டுமென குறிப்பிட்ட சம்பந்தன், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லையெனவும் தெரிவித்தார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்