இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் எடப்பாடி அணி?

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க. இரண்டு அணியாக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் என செயல்பட்டு வந்தன. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆனார். இந்த நேரத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை பெற இரு அணிகளும் தேர்தல் கமிஷனில் முறையிட்டன.

வேறு வழியில்லாமல், அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் கமிஷன் முடக்கியது. இதனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் வெவ்வேறு சின்னங்களிலேயே இரு அணிகளும் போட்டியிட தயாராகின. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக வெளியான புகாரை தொடர்ந்து, அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதன்பின்னர், இரு அணிகளும் கட்சி மற்றும் சின்னத்தை பெறுவதில் முனைப்பு காட்ட தொடங்கின. லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களை இரு அணியினரும் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்தனர். ஆனால், ஆவணங்களை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்யும் முன், ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றாக இணைந்தன.

சசிகலா சிறை சென்றதால் அ.தி.மு.க. (அம்மா) அணி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் வந்தது. அதன்பிறகு இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. இந்த இணைப்பை விரும்பாத அ.தி.மு.க. (அம்மா) அணியைச் சேர்ந்த துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் அவரது தலைமையில் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.

இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய அணியினரும், டி.டி.வி.தினகரன் அணியினரும் தேர்தல் கமிஷனில் தங்கள் தரப்பிலான லட்சகணக்கான ஆவணங்களை தாக்கல் செய்தனர். இருதரப்பிலும் பல்வேறு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது.

இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவது தொடர்பாக ஒருங்கிணைந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கும், சசிகலா அணியினருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இன்று இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கி தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணைய உத்தரவை அடுத்து அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலைச் சின்னம் மற்றும் கட்சிக் கொடியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வினர் பயன்படுத்திக் கொள்ளத் தடை இல்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் உறுதிபடுத்தப்படவில்லை. என்றாலும் தேர்தல் கமிஷன் அறிவிப்பு பற்றிய தகவல் காரணமாக எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் அவர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

சின்னம் தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ராஜேஷ் மல்கோத்ரா தகவல் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து கருத்து தெரித்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை எங்கள் வசம் வந்துள்ளது. விசாரணையை மேற்கொண்டு நியாயமான தீர்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது என கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்