நினைவுகூரலில் அரசியல் வேண்டாம்: நிம்மதியாக அழவிடுங்கள்! கே.வாசு

தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தில் தமிழ் மக்கள் கொடுத்த விலைகள் ஏராளாம். அந்த உயிர்கள் ஒவ்வொன்றும் தமிழ் மக்களின் விடுதலைக்டகாகவும், அவர்களின் உரிமைக்காகவும், நீதிக்காகவும், அடக்கு முறைக்கு எதிராகவும் போராடியதன் விளைவாக பறிக்கப்பட்டவை. அந்தகையோரை நினைவுகூறுவது என்பது தமிழ் மக்களின் கடமையும் கூட. அதனை எவரும் தடுத்து விட முடியாது. ஆனாலும் யுத்தம் முடிவடைந்த பின்னர் வெற்றிவாதத்தில் மிதந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் இறந்த உறவுகளை நினைவு கூருவதற்கும், பொது இடத்தில் ஒன்று கூடி அஞ்சலி செய்வதற்கும் இராணுவ நெருக்குவாரங்களைப் பயன்படுத்தி தடை போட்டு வந்தது. இதனால் ஒவ்வொருவரும் தமது வீடுகளிலும், உள்ளங்களிலும் நிலைநிறுத்தியே தமது உறவுகளுக்கான நினைவேந்தலை செய்தனர். ஆனால் 2015 ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக இறந்தவர்களை நினைவு கூர அனுமதி வழங்கப்பட்டது. விடுதலைப் புலிகளை நினைவு கூர முடியாது. ஏனைய உறவுகளை நினைவு கூர முடியும் எனக் அரசாங்கத்தால் கூறப்பட்டது. முள்ளியவாய்கால் நினைவேந்தல், மாவீரர் நாள், தியாக தீபம் திலீபன் நினைவேந்தல், விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் திலீபன் நினைவேந்தல் என்பன இடம்பெற்றுள்ளதுடன் அஞ்சலி நிகழ்வுகளும் மக்கள் ஆதரவுடன் நடைபெற்றுள்ளன. இறுதியாக விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்செல்வன் உள்ளிட்ட 7 மாவீரர்களின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகப் பிரதேசத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் சில பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இராணுவ புலனாய்வுத்துறையின் கண்காணிப்பின் மத்தியிலும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் வரவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் தீவிரம் பெற்றிருக்கின்றன.

யுத்தம் முடிவடைந்து ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை தமிழர் தாயகப் பிரதேசங்களில் இறந்த மாவீரர்களுக்கான நினைவேந்தல்கள் அனுஸ்டிக்கப்படாத போதும் புலம்பெயர் தேசங்களில் தமிழர் வாழும் இடங்களில் அவை உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வந்தன. புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழ உணர்வாளர்கள் தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றையும்இ அதன் கலாசார பண்பாடுகளையும் பாதுகாத்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாகவே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துடன் தொடர்புடைய நினைவேந்தல்களை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். மாவீரர் நாள், கரும்புலிகள் நாள், திலீபன் நினைவேந்தல், தமிழ்செல்வன் நினைவேந்தல், மாலதி நினைவேந்தல் என அந்த பட்டியல் நீண்டு செல்கின்றது. அண்மையில் கூட விடுதலைப் புல்களின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன் உள்ளிட்ட 7 மாவீரர்களின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தலும், சுகவீனம் காரணமாக சாவடைந்த விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வும் பிரித்தானியாவில் வசிக்கும் ஏராளமான தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது. மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளும் பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, சுவிஸ், பிரான்ஸ் போன்ற புலம்பெயர் தேசங்களில் நடைபெறுகின்றது. இவ்வாறாக புலம்பெயர் தேசங்களில் அமைப்பு ரீதியாகவும், ஈழ உணர்வளார்களின் ஒருங்கிணைப்பிலும் இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

கடந்த வருடம் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்பரவு செய்யப்பட்டு அந்த பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. மக்கள் கண்ணீர் சிந்த உணர்வு எழுச்சியுடன் பங்கு பற்றிய அந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயலாபம் தேடிக் கொண்டனர். மாவீரர் துயிலும் இல்லங்களில் ஏற்றப்படுகின்ற பொதுச் சுடரினை இந்த மண்ணில் உயிர்நீத்த மாவீரர் ஒருவரின் பெற்றோரே ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பாலும் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் அரசியல்வாதிகள் குறிப்பாக தமிழரசுக் கட்சியினர் ஒவ்வொரு துயிலும் இல்லங்களிலும் தாமே பொதுச் சுடரை ஏற்றி தம்மை உத்தமர்களாக காட்ட முனைந்தனர். இந்த நிலையில் இம்முறை மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்ற நிலையில் அரசியல்வாதிகள் பொதுச்சுடர் ஏற்றக் கூடாது என்ற வாதம் வலுப்பெறத் தொடங்கியிருக்கிறது. சில துயிலும் இல்லங்களில் மக்களது துப்பரவு பணிகளுக்கு இராணுவம் இடையூறுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், இளைஞர்கள், பொதுமக்கள் எனப்பலரும் பொதுச்சுடரினை மாவீர்களின் பெற்றோரே ஏற்ற வேண்டும் என கூறிவருகின்றனர். தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஒவ்வொரு துயிலும் இல்லங்களையும் தாமே தத்தெடுத்தவர்கள் போல் தமது ஆதரவாளர்களைக் கொண்டு துப்பரவு செய்து தாம் பொதுச்சுடரை ஏற்றுவதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளனர். இதனால் சில துயிலும் இல்லங்களின் துப்பரவு பணியின் போது தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையில் முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் பொதுச் சுடரை ஏற்றும் நிலை ஏற்படுமாக இருந்தால் அது மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தி மாவீரர் நாளையே குழப்பம் நிறைந்த ஒரு நாளாக மாற்றியமைத்து விடும். மாவீரர் குடும்பங்களும், மக்களும் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர். கூட்டமைப்பு தலைமையின் அண்மைக்கால செயற்பாடுகளும் அந்த விரக்தியை தீவிரப்படுத்தியுள்ளன. அது ஆரோக்கியமானது அல்ல. இறந்தவர்களை நினைவு கூர அனுமதி கேட்டு போராடிய காலம் போய் இன்று யார் நினைவு கூருவது என்பது குறித்து சண்டை பிடிக்கும் நிலை ஏற்பட்டமை வேதனையான விடயமே. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் சுயநலங்களுக்காக உரிமைக்காக இறந்த உத்தமர்களை உதாசீனம் செய்யக் கூடாது. அவர்களின் ஆத்மாக்கள் ஒரு போதும் மன்னிக்காது. அந்த மாவீரர்களை பெற்ற ஒவ்வொரு குடும்பங்களின் வலிகளும், துயரங்களும் மிகவும் ஆழமானவை. நினைவு கூரலில் அரசியல் வேண்டாம். அந்தப் பெற்றோரை தமது பிள்ளைகளுக்காக அவர்களை புதைத்த இடத்தில் ஒரு நிமிடமாவது நிம்மதியாக அழவிடுங்கள். அவர்கள் மனங்களை மேலும் புண்படுத்தி நினைவுகூரல் நிகழ்வை குழப்ப நிகழ்வாக மாற்றி விடமுடியாது. இதனை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை மாவீரர்கள் என்றும் பூசிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களை நினைவுகூரும் நவம்பர் 27 என்னும் அந்த புனித நாளை சுயநல சண்டைகளை விடுத்து புனிதமாக மதியுங்கள். அதுவே அவர்களுக்கு செய்யும் மரியாதையாக அமையும்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்