மாவீரர்களின் பெற்றோர் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்: கஜேந்திரகுமார்

மாவீரர்கள் மாத்திரமன்றி மாவீரர்களின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் காலை 11 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதில், மாவீரர்களின் பொது உருவ படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. இதன்போது அங்கிருந்த மாவீரர்களின் பெற்றோர் கண்ணீர் மல்க மலரஞ்சலி செலுத்தியிருந்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், 2009ம் ஆண்டுக்கு முன்னர் ஆயுத குழுக்களாக செயற்பட்டவர்கள் இன்று மாவீரர்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கின்றனர்.

யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் விடுதலை புலிகளை அழிக்க உதவிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இன்று மாவீரர்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கின்றனர். இவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது நாம் நன்கு அறிவோம் என குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரபாகரன் ஏற்றுக்கொள்ளாத 13ம் திருத்த சட்டத்திற்கு ஒப்பான ஒற்றை ஆட்சி தொடர்பில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்கும் வகையில் செயற்படுகின்றனர்.

அவர்கள் கிளிநொச்சியில் உள்ள உங்களிடமும் அதற்கு ஆதரவு கோரி வருவார்கள் என கஜேந்திரகுமார் அங்கு மேலும் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்