ஆசனப் பங்கீடு தொடர்பில் மீண்டும் மந்திராலோசனை!

உள்ளூராட்சித் தேர்தலில் ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான மூன்றாவது சுற்றுப்பேச்சு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஆரம்பமானது.

பங்காளிக் கட்சிகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆளணி மற்றும் பங்கீடுகள் தொடர்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மார்டீன் வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் அக் கட்சியின் செயலாளர் ஆர்.துரைராஜசிங்கம் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறுகிறது.

தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா, சிறிநேசன், சிவமோகன், துரைரட்ணசிங்கம், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பிரதி அவைத் தலைவர் கமலேஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் த.குருகுலராசா, பா.சத்தியலிங்கம், பசுபதிப்பிள்ளை, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் தண்டாயுதபாணி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன், புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், வடக்கு மாகாண அமைச்சர் க.சிவநேசன், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மோகன் மற்றும் ஆனந்தன் ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.

மேலும், ரெலோ சார்பில் அதன் பொதுச்செயலாளரும், மூத்த சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஐனா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதாரலிங்கம் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் அண்மைய செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நம்பிக்கையின்மையை எதிர்கொள்ளுதல் மற்றும் எதிர்த் தரப்பினரின் பிரசார வியூகங்களைக் கையாளுதல் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்