ஈபிடிபியுடன் கூட்டு – ஏற்றுக்கொள்ளமுடியாது-சிறீதரன்

ஈ.பி.டி.பி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியிடம் ஆதரவு பெற்று உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து தம்மோடு கலந்துரையாடப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து செயற்படுவது தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் எந்த தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.ஈ.பி.டி.பி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஆதரவு பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைத்து வருகின்றது.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழ்த் தேசியக் கட்சி தமிழர் விரோத கட்சிகளான ஈ.பி.டி.பி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியிடம் ஆதரவு பெற்று ஆட்சியமைத்து வருகின்றது. ஆனால் இந்த இரு கட்சிகளிடமிருந்து ஆதரவு பெற்று உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து கட்சியில் எவ்வித பேச்சுக்களும் இடம்பெறவில்லை. தனிப்பட்ட ரீதியாகவே இந்த முடிவுகள் எடுத்து நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

குறித்த இரு கட்சிகளின் மீதும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இரு கட்சிகளும் தேச விரோத கட்சிகளாகவே பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களிடம் ஆதரவு பெற்று ஆட்சி அமைப்பது என்பதை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

இந்த முடிவுகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லப் போகின்றது. தமிழ் மக்களுடைய கணிசமான ஆதரவை கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதே கணிசமான தமிழ் மக்களால் வெறுக்கப்படுகின்ற கட்சிகளிடம் ஆதரவு கோரி எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முடியும்? இதனை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது மக்கள் கோபத்தில் உள்ள நிலையில் சிறீதரன்  இதுபோன்ற கருத்தை  தெரிவித்துள்ளார். கொள்கையை விற்பவர்களில் சிறீதரனும் ஒருவர் என்பதை அவரது கடந்தகால செய்ற்பாடுகளை கண்டவர்கள் அறிவார்கள்

About இலக்கியன்

மறுமொழி இடவும்