மருதங்கேணியில் மதம் கொண்ட யானை தாக்கி ஒருவர் பலி; இருவர் படுகாயம்!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் புகுந்த மதம் கொண்ட யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளார்கள்.

திங்கட்கிழமை காலை இடம் பெற்ற இச்சம்பவத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த மருந்தங்கேணி தெற்கைச் சேர்ந்த சிற்றம்பலம்-சத்தியசீலன் (வயது-54) என்ற குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் உடுத்துறையைச் சேர்ந்த நாடராசா-முருகதாஸ் மற்றும் மருதங்கேணி தெற்கைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை-குமார் ஆகிய இருவர் படுகாயமடைந்துள்ளார்கள்.

இது குறித்து தெரியவருவதாவது… நேற்று முந்தினம் ஞாயிற்றுக் கிழமை காலை உடுத்துறை, ஆழியவளைப் பகுதிக்குள் காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது. மதம்பிடித்து திரிந்த அந்த யானையிடம் இருந்து ஒருவர் மயிரிழையில் தப்பியுள்ளார். இது குறித்து மருதங்கேணி பிரதேச செயலர் கே.கனகேஸ்வரன் அவர்களுக்கு பொதுமக்களால் தெரியப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து கடற்படை, இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் வன விலங்கு பாதுகாப்புப் பிரிவினருக்கு பிரதேச செயலர் தெரியப்படுத்தியதையடுத்து குறித்த பகுதியில் அவர்கள் தேடுதல் நடத்தி வருகின்றனர்.

மாடுமேய்த்துக் கொண்டிருந்த சத்தியசீலன் என்பவர் யானை தாக்கி உயிரிழந்த பின்னர்தான் மருதங்கேணி காட்டிற்குள் யானை வந்துள்ளதை அப்பகுதியினர் அறிந்துள்ளார்கள். இதையடுத்த வேடிக்கை பார்க்க சென்றவர்களே யானை தாக்கி படுகாயமடைந்துள்ளதாக அறியமுடிகிறது.

இதையடுத்து பிரதேச செயலர் கே.கனகேஸ்வரன் அவர்கள் தனது வாகனத்தில் ஒலிபெருக்கி ஊடாக பொது மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் காட்டுப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.

யானை நிற்கும் இடம் அடையாளப்படுத்தப்பட்டு காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் வனவள பாதுகாப்புப் பிரிவினர் ஆகியோர் முற்றுகையிட்டுள்ளதாகவும் ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தும் மருத்துவர் வந்துகொண்டிருப்பதாகவும் அவர் வந்ததும் மயக்கு ஊசி செலுத்தப்பட்டு யானை பிடிக்கபடும் என பிரதேச செயலர் கே.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுவரை யானை பிடிக்கப்படவில்லை. இதனால் மருதங்கேணி, ஆழியவளை மற்றும் தாளையடி உள்ளிட்ட வடமராட்சி கிழக்குப் பகுதி மக்களிடம் பீதியேற்பட்டுள்ளது.

ஈழதேசம் இணையம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்