இந்த அரசும் இனவாதம் என்ற நிலையிலேயே உள்ளது – பா.அரியநேந்திரன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் காலில் விழாத குறையாக விட்டுக்கொடுப்புகளை செய்கின்றபோதிலும் இந்த அரசாங்கம் இனவாதம் என்ற நிலைக்குள்ளேயே இருந்து வருவதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பில் 17 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு 27ஆவது ஆண்டு நிறைவு நேற்று புதுக்குடியிருப்பில் உள்ள நினைவுத்தூபி அருகில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

1990ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட படுகொலையானது படிப்படியாக காரைதீவு, பாண்டிருப்பு,களுவாஞ்சிகுடி, கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு, ஆரையம்பதி ஊடாக ஊர்காவற் படையினரும் இராணுவத்தினரும் ஒரு பகுதி மக்களை கொலை செய்துகொண்டிருந்தார்கள்.

அப்போது நகர்ப் பகுதிகளிலிருந்த பல இளைஞர்கள் பாதுகாப்பிற்காக படுவான்கரைப் பகுதிக்கு தஞ்சம் கோரி வந்திருந்தார்கள். அந்த நேரத்தில் படுவான்கரை பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது.

பல்வேறு படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது முஸ்லிம் ஊர்காவற் படையினர் முஸ்லிம் கிராமங்களிலிருந்து தமிழ்க் கிராமங்களுக்கு வருகின்றார்கள் என்ற செய்தி படுவான்கரை பகுதியில் பரவியது. என்ன நேரத்தில் என்ன நடக்குமோ என்ற ஐயப்பாடு எங்கள் மத்தியில் இருந்தது.

1990ஆம் ஆண்டு என்பது பிரேமதாச அவர்களின் ஆட்சிக் காலமாக இருந்தது. 1990ஆம் ஆண்டிற்கு முன்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்திலே முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் ஏந்தி போராடியிருந்தார்கள்.

35 பேர் மாவீரர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றார்கள். பிரேமதாச அவர்களின் ஆட்சியில் தீட்டப்பட்ட சதித்திட்டங்களில் ஒன்று முஸ்லிம் மக்களை தமிழ் மக்களிலிருந்து பிரித்து அவர்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தி தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்பதாகும்.

ஊர்காவற்படையை தமிழ் மக்களுக்கு எதிராக ஏவிவிட்டு தமிழர்களும் முஸ்லிம்களும் மோதுகின்ற துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்துவதில் அவர் வெற்றி கண்டார்.

யாழ்ப்பாணத்தில் இருந்த முஸ்லிம் மக்களை பாதுகாப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றினர் என்கின்ற நிலை ஏற்பட்டது என அவர் தொடர்ந்தும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்