வெள்ளைக் கொடி விவகாரத்தை கஜேந்திரகுமாா் மறைப்பது ஏன்? – சிவாஜிலிங்கம்

வெள்ளைக்கொடி விவகாரத்தில் விடுதலைப் புலிகளுக்கு தரகராயிருந்ததையும் பஷில் ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி, வெள்ளைக் கொடியுடன் போகுமாறு நடேசனுக்குக் கூறியதையும் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மறைத்து வருவதாக எம். கே. சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

யாழ். ஊடக மையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், சிவாஜிலிங்கம் தொடா்பில் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு பதில் அளிக்கும்போதே மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “கஜேந்திரகுமாரிடம் சில கேள்விகளைக் கேட்கிறேன். அதாவது ஜனாதிபதி தனது உரையில் இப்போது தூக்கவேண்டியது கறுப்புக் கொடிகளை அல்ல. வெள்ளைக் கொடிகளையே எனக் கூறியமைக்கு பதிலளிக்க முடியாது என்னிடம் வந்து கேட்டுக் கொண்டிருப்பது ஏன்? வெள்ளைக்கொடி விவகாரத்தில் விடுதலைப் புலிகளுக்கு தரகராயிருந்ததை பகிரங்கமாக கூறத்தயங்குவது ஏன்?

பஷில் ராஜபக்ஷவுடன் பேசிவிட்டு நீங்கள் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில்தான் நடேசன் தலைமையிலானவா்கள் வெள்ளை கொடியுடன் சென்றாா்கள் என்பதை ஐ.நா.விசாரணைக்குழுவிற்காவது சொன்னீர்களா? ஆனால் நான் அதனைப் பத்துப்பக்கங்களில் அனுப்பியிருந்தேன்.

கஜேந்திரகுமாராகிய நீங்களும் அதனைச் செய்திருந்தால் நான் அதனை வரவேற்பேன். அவ்வாறு செய்யவில்லையாயின் நீங்கள் அதனை பகிரங்கப்படுத்துங்கள் எனக் சவால் விடுகின்றேன். இதனைவிடுத்து தேவையற்ற விதத்தில் என்னைத்துணை போகின்றார் என்று கூறவேண்டிய அவசியமில்லை.

ஜெனிவாவில் தமிழ் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தலைவர் பிரபாகரனுடைய உருவப்படம் இராணுவச் சீருடையுடன் எடுத்து வரப்பட்டபோது அதற்குப் பக்கத்திலே வைக்கோவுடன் நான் நடந்து சென்றேன். அச்சமயத்தில் எல்லாம் அந்தக் கூட்டங்களில் நீங்கள் எவ்வளவு தூரத்தில் நின்றீர்கள் என்று உங்களுக்கும் தெரியும். அங்கிருந்த மக்களுக்கும் தெரியும்.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்