தமிழ் மக்களை ஏமாற்றுவதில் சம்பந்தன் தெளிவாக உள்ளார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

தமிழ்மக்களை ஏமாற்றுவதில் சம்பந்தன் உட்பட தமிழரசுக் கட்சியும் அதன் பங்காளிக் கட்சிகளும் தெளிவாக உள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகம் ஒன்றின் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தனது கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்திருக்கும்போது, 2009ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரியபோது அத்தேர்தலில் பொன்சேகாவை ஆதரிப்பதாக பெரும்பான்மையாக முடிவெடுக்கப்பட்டது.

இதன்பின்னர், சட்டத்தரணி கனகேஸ்வரனின் வீட்டு நூலகத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைர் இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் (கூட்டமைப்பிற்குள் முதற் தடவையாக உள்வாங்கப்பட்டவர்) செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டதாகவும் தெரிவித்த அவர் அக்கூட்டத்தில் இரா.சம்பந்தன் ‘கொள்கைகளை வலியுறுத்த முடியாது, கட்சியில் இருப்பதென்றால் இரும். இல்லாவிட்டால் போம்’ எனத் தெரிவித்ததாகவும், பிறிதொரு சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் தற்போது நொந்துபோயிருக்கினம், அவர்களுக்கு கொள்கை அவசியமில்லையெனவும் தேர்தலே முக்கியம் எனவும் இரா.சம்பந்தன் ஆணித்தரமாகத் தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே தாம் கட்சியிலிருந்து விலகியதாகவும் தெரிவித்த அவர், தமிழ் அரசியலிலிருந்து தமிழ் தேசியத்தை நீக்கும் முகமாக அவர் மிகவும் சூட்சுமமாக காய்களை நகர்த்தி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் மக்கள் தற்போது சம்பந்தன், சுமந்திரனின் தந்திரங்களைப் புரிந்துகொண்டாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு சம்பந்தன், சுமந்திரனால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களுக்கு எந்த எதிர்ப்பையும் காட்டாது மௌனம் காத்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்